ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருடன் தனித்தனியாக கலந்துரையாடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருடன் தனித்தனியாக கலந்துரையாடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும், இதுவரையில் அக்கட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடையவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வருவதாயின் கட்சி என்ற வகையில் மாத்திரமே அத்தீர்மானம் அமையும் எனவும், தனிப்பட்ட ரீதியில் அமைய மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் உருவாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், அடுத்ததாக, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அதற்கான உடன்படிக்கை தயார் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளருடன் ஒரு உடன்படிக்கையும், பொதுஜன பெரமுன கட்சியுடன் மற்றுமொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.