புதியவகைக் காய்ச்சல்:மக்களே அவதானம்!

ஒரு வித காய்ச்சல் காரணமாக, முல்லைத்தீவில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியினை சேர்ந்த 7 வயதுடைய அலக்சன் அஸ்வினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 2ல் கல்வி கற்று வந்தவராவார்.

இந் நிலையில் கடந்த வாரம் பாடசாலை விடுமுறை விட்ட காலப்பகுதியில் இருந்து சிறுமி ஒரு வித சோர்வாகவே காணப்பட்டிருந்தார்.

இந் நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டிருந்ததாகவும், பெற்றோர் உடனடியாக பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை திடீரென காய்ச்சல் அதிகரித்த நிலையில், தந்தையார் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருந்தபோது, சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறினர்.

குறித்த சிறுமி உயிழந்தமைக்கான காரணம் என்னவென்று அறியப்படவில்லை எனவும், சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக, சிறுமியின் சடலம் மாஞ்சோலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்திருந்மை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!