அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைக் கண்டித்து வெனிசுவேலாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இன்று கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
வெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது. ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனம் செய்து கொண்டார்.
நாடாளுமன்றம் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றது செல்லுபடியாகாது என்றும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குவைடோ வலியுறுத்தி வருகிறார்.
குவைடோவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக வெனிசுவேலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்த தடைகளை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் ட்ரம்புக்கு எதிராக வெனிசுலாவில் ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் பாரிய கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவியின் கையெழுத்துக்களுடன் ‘ட்ரம்ப் வேண்டாம்’ என்ற பெயரில் நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி ட்ரம்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். (007)