மக்களுக்காக மரணிக்கவும் தயார் : சஜித்

அமைச்சர் சஜித் பிரேமாச இன்று பதுளை மாவட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அங்கு மக்கள் பேரணியாகத் திரண்டு, அவரை வரவேற்றுள்ளனர்.


அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, நேற்றையதினம் மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணி குறித்தோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவைப் பரிந்துரைக்க வேண்டும் எனக்கோரி நாடளாவிய ரீதியில் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் பதுளை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, இன்று மாலை நடைபெற்றது.

பதுளையில் உள்ள வில்ஸ் பார்க் மைதானத்தில் குறித்த பேரணி நடைபெற்றது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர,
கொழும்பு காலி முகத்திடலில் ஒரு பெரிய பேரணியை நடத்தி, எமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.

நாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டுவருவது என்றும் அவர் கூறினார்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் இரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகளவான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

மக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். எனது தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்ய நான் தயார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும்போது பொருளாதாரம் மேம்படும். இளைஞர்களை கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.

நாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் . ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் கல்வி , சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு, புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பள பிரச்சினை குறித்து கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவர். இவற்றை உருவாக்குபவர் யார்? அவை எப்படி உருவாகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

நாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டினை பிரிக்க எந்த சக்திக்கும் இடமளிக்க மாட்டோம்.

இன மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பமிடமாட்டோம். நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதனை பத்து தர்மங்கள் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்வோம்.

நாங்கள் பலவீனமானவர்கள் அல்லர். நான் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வேன். தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்யவும் தயார்… என்று குறிப்பிட்டார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!