ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில்…

ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் யார் சாதகமான சமிஞ்சைகளை தர முன்வருகின்றார்களோ அவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கருத்தை தனது இல்லத்தில் வைத்து இன்று (12)ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தீர்வுத்திட்டம் எனும் விடயத்தை நிறைவேற்றும் பொருட்டு எழுத்து மூலமாக உத்தரவாதத்தை ஒப்பந்தத்தின் மூலம் தருவதுடன் ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பிலும் சாதகமான கருத்தை வெளியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் மக்கள் ஆதரவை வழங்குவர்.

ஆனாலும் கடந்த காலத்தில் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கமும் காலத்திற்கு காலம் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளது. இனிவரும் காலத்திலாவது தமிழ் மக்களை ஏமாற்றாத தலைமைத்துவத்தையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் எங்களது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமும் கட்சிகளும்; இணைந்து சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் எனவும் கூறினார்.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவின் சகோதரர் என்பது தெரிந்த விடயமே. அவ்வாறு பார்க்கையில் குறித்த இருவரும் ஒரே சிந்தனை மற்றும் கொள்கையுடையவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் கடந்த யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட விடயங்களில் அவருக்கும் பாரிய சம்மந்தம் உள்ளது.

அந்த வகையில் கடந்த அவர்களது ஆட்சி தமிழ் மக்களுக்கு வழங்கிய நன்மைகள் அல்லது தீமைகள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் தீர்ப்பினை வழங்குவர் எனவும் கூறினார்.

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!