உலக நாடுகளுடன் உறவைப் பேண தயார் எனவும், ஆனால் நாடுகளுக்கு அடிபணிந்திருக்க தயாரில்லை எனவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
விசேடமாக கடந்த காலத்தில் நாட்டுக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள். நான் இலங்கைப் பிரஜை என்ற வகையில் பெருமைப்படுவதுடன், நாட்டையும் நேசிக்கின்றேன்.
எனக்குக் கொடுக்கப்படும் பொறுப்புக்களை சரிவர செய்து முடிப்பேன் எனவும் இங்கு கூறிக்கொள்கிறேன்.
30 வருட கால யுத்தத்தை மூன்றரை வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டுவருவதற்கு, தலைவர் மஹிந்தவிற்கு, என்னால் உதவி புரிய முடிந்தது.
நான் பதவி வகித்த காலத்தில் நாட்டுக்குப் பாதகமளிக்கும் யாருக்கும், எந்தச் செயற்பாட்டுக்கும் இடமளிக்கவில்லை.
இன்று நாட்டுக்குத் தேவையாகவுள்ளது நேர்மையான, முறைகேடற்ற, இந்நாட்டைக் கட்டி எழுப்பக்கூடிய தலைவரே. அதனை நான் நிறைவேற்றுவேன்.
இந்நாட்டில் பிறந்த அனைத்து இனங்களும் அச்சமின்றி வாழ முடியும். ஆயினும் நான் ஒருபோதும் அடிப்படைவாதத்திற்கும், பயங்கரவாத்திற்கும் இடமளியேன்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன், மஹிந்த சிந்தனையில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தோம்.
அதை மீண்டும் முன்னெடுக்க வேண்டும்.
இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் பொருளாதார வசதிகளுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன்.
மாணவர்களின் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கு, குறுகிய காலத்திற்குள் நாம் உதவுவோம்.
எதிர்காலத்தில் நவீன உலகிற்கேற்ப நாட்டைக் கட்டி எழுப்புவது எமது திட்டமாகும். நாட்டில் வாழ்வோரில் அதிகமானவர்கள், மீன்பிடி, விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதனை மெருகூட்ட நவீன வசதிகளை முன்னெடுப்பேன். அரச திணைக்களங்களை நவீனமயப்படுத்தி, மக்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைப்பேன்.
நகரத்தை மட்டுமல்ல, கிராமங்களிலுள்ள வீதிகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படும். கிராமங்கள் நகரங்களாக மாற்றப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், தமது வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகள், தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும்.
நகர அபிவிருத்தித் திட்டம் மீண்டும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நாங்கள் அனைத்து நாடுகளுடனும், உறவைப் பேண விரும்புகிறோம்.
ஆனால் நாடுகளுக்கு அடிபணிந்திருக்கத் தயாரில்லை. எமது நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் ஏற்படாவண்ணம், ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
நாட்டில் அடுத்த ஜனாதிபதியைத் தேர்தெடுக்க, இன, மத பேதமின்றி மக்கள் ஒன்றிணைய வேண்டுகின்றேன்.
பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குப் பெறும் கலாசாரத்தை நாம் இல்லாமல் செய்வோம்.
அதனை மாற்றுவோம். நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நான் பொறுப்பேற்று நிறைவேற்றுவேன்.
வெற்றி நிச்சயம். என குறிப்பிட்டுள்ளார்.