சிறந்த தலைவர் நாட்டிற்கு தேவை : மகிந்த

நீதியை, சட்டத்தை மதிக்கும், வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பக் கூடிய தலைவரே தேவை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைகண்டு கவலைப்பட்ட மக்கள் எதிர்பார்த்த நாள் இன்றைய நாள்.
அதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

அரசாங்கம் நெருக்குதலைக் கொடுத்த போதும், மக்களுடன் சேர்ந்து பல தலைவர்களும் எம்முடன் துணை இருந்தார்கள்.
ஐ.தே.க அரசாங்கம் கொடுத்த அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களின் நன்மைக்காக எம்முடன் துணை நின்றார்கள்.
எம்மீது பொய்யான வழக்குகளைப் போட்டார்கள். அரசியலில் மீண்டும் நான் வராத அளவிற்கு சட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.
எமக்கு நெருக்குதல்களைக் கொடுத்தார்கள்.

ஆனபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்க நாம் இடமளிக்கவில்லை. யார் மீதும் எமக்குப் பகைமையில்லை. பகைமையைக் கொண்டு எதையும் வெல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.

பண்டாரநாயக்காவும், எனது தந்தையும் கட்சியை ஆரம்பித்த போது, ஐ.தே.கவிற்கு எதிரான பலமான கட்சியை உருவாக்கிக் காட்ட நினைத்து செயற்படுத்தினார்கள்.

ஐ.தே.கவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஸ்ரீ கொத்தாவிற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போது பலர் அதை விரும்பவில்லை.

போராட்டங்களை நடாத்தி, அச்சுறுத்தல்களை விடுத்து முன்னெடுத்த அரசியலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போதும், மண் சரிவு ஏற்படும் போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும் போதும், வரி அறவிடும் போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும் போதும், இந்த நாட்டு மக்களுக்கு எம்மை நினைவு வந்தது.

இந்தக் காரணங்களால் பெரமுனக் கட்சியை மக்கள் பற்றிக் கொண்டார்கள். இந்த அரசாங்கத்தின் காலம் முடிந்து விட்டது.
தேசிய பாதுகாப்பு அடிமட்டத்திற்குச் சென்று விட்டது.

தேசிய பாதுகாப்பு இல்லாது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டைக் கட்டிக்காக்க முடியுமா?

நாட்டுக்காக எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கியதை விடவும், மோசமான நாடொன்றையே எம்மால் பெறுப்பேற்க வேண்டியுள்ளது.

சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்காக, இன்றையதினம் நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினோம். அச்சமின்றி விஹாரைக்கு சென்று, அன்னதானம் கொடுக்கக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்களுக்கு, அச்சமின்றி அவர்களது மதத்தலங்களுக்கு செல்லக்கூடிய வகையிலான நாடொன்றை உருவாக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர் என்ற எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகின்றது. 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை.

நாடொன்றில் ஒழுக்கம் இருக்க வேண்டும். சட்ட ஒழுங்கு வேண்டும். நண்பகலில் கொள்ளை, கொலை இடம்பெறுமாயின், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு கிடையாது. அவ்வாறு ஒழுக்கம் உள்ள ஒருவர் தேவைப்படுகின்றார்.

உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என, 2005 ஆம் ஆண்டு யாரும் நினைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு, தமது குழந்தைகளை சுதந்திரமான ரயிலில் அழைத்து வர முடியும் என, தமிழ் மக்கள் நினைக்கவில்லை.

முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல முடியும் என, அவர்கள் நினைக்கவில்லை. ஆசியாவிலேயே மிக சுத்தமான நகரமொன்றை உருவாக்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. நாம் அதனை செய்தோம். எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார்.

30 வருட காலம், வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் வெளிநாடுகளில் சந்தோசமாக இருக்க முடியும் என்னும் நிலையுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தை எரித்து வாக்குவங்கியைக் களவாடியது. நீண்ட காலத்தின் பின்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தியது நாங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பின்னரே வடக்கிற்கு சென்றது. வடக்கு மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளது.
அந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். நான் செய்வேன் என்று சொல்பவரை விட, செய்துகாட்டிய தலைவரை உருவாக்குவது முக்கியம்.

பகைவர்கள்மீது பழிவாங்குவதற்காக சட்டத்தைப் பயன்படுத்தும் ஒருவர் தேவை இல்லை. நீதியை, சட்டத்தை மதிக்கும் ஒருவர் எமக்குத் தேவை.

இந்த நாட்டில் வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பக் கூடிய தலைவரே தேவை. இந்த அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியது.

2030 வரை நாட்டின் எதிர்காலத்தைக் கட்டிக்காக்க சரியான தலைவர் தேவை. மக்கள் தெரிவு செய்யும் சரியான தலைவர் தேவை.
நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் தலைவரே தற்போது மக்களுக்குத் தேவை.

எமது கட்சி சார்பில் வேட்பாளரைத் தெரிவு செய்தது நானல்ல. என்னைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட நீங்களே.
என்னுடைய சகோதரனை, நான் உங்கள் சகோதரனாக உங்களிடம் தருகின்றேன். அவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய. என குறிப்பிட்டுள்ளார்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!