நாட்டில் நிலவும் வரட்சிக்காக மழை வேண்டி அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியினை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை இன்று மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியது.
அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய வரட்சியினால் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் உட்பட உயிரினங்கள் பாரிய நீர் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகி வருகின்ற நிலை தோன்றியுள்ளது.
குடிப்பதற்கு நீரில்லாமல் மனிதர்கள் மட்டுமல்லாது மிருகங்கள் மற்றும் பறவைகளும் தத்தளிக்கும் நிலையில் நாட்டில் வரட்சியை போக்க மழை பொழிய வேண்டுமென பிரார்த்தித்து இந்த பாதயாத்திரையை இன்று ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மழை வேண்டி பிரார்த்திக்கும் இப் புனித பாதயாத்திரை வலையறவு, குறிஞ்சாமுனை, வாழைக்காலை மற்றும் பனையறுப்பான் ஆகிய பகுதிகள் ஊடாக சென்று தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நாளை சென்றடையவுள்ளது.
இரு தினங்களாக இடம்பெறும் இப்பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணைந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. (007)