மட்டக்களப்பில் விபத்து: இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கோழிகளை ஏற்றுக் கொண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற சிறிய லொறியொன்று, முன்னால் சென்ற டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் வைத்து முன்னால் சென்ற டிப்பர் வாகனத்துக்கு டயர் வெடித்த நிலையில், பின்னால் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மோதியுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை பொது மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை நடாத்தினர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும், காயமடைந்தவரும் ஏறாவூர் முதலாம் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பயணித்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஏறாவூரைச்சேர்ந்த லொறி எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!