ஜனநாயக சீர்திருத்தம் கோரி, ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் விமான நிலையத்தில் 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தை நேற்று ஆரம்பித்தனர்.
இரு மாதங்களாக நடைபெறும் தங்களது போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவதற்காக குறித்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், அந்த மசோதா காலாவதியான பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து ஏராளமானோர் வந்திறங்கும் ஹொங்கொங் விமான நிலையத்தில் 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பதாகைகள் மற்றும் கோஷங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை அவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.
‘காவல் துறையினரின் அடக்குமுறையிலிருந்து ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள், ஹொங்கொங்குக்கு விடுதலை வேண்டும்| என பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியுள்ளனர்.
நாடுகடத்தல் மசோதாவுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய போராட்டங்கள், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச சமுதாயத்தினரின் ஆதரவைப் பெறும் வகையில் இந்த 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(நி)