பாகிஸ்தானின் கராச்சி நகரை இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூருடன் இணைக்கும் ‘தார் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
‘தார் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை நேற்றைய தினம் நள்ளிரவுடன் நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமத் அறிவித்திருந்தார்.
இந்தியாவுடனான உறவை முறித்துக்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, ‘சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை நிறுத்துவதாக நேற்றுஅறிவித்ததைத் தொடர்ந்து ‘தார் எக்ஸ்பிரஸ்’ வாராந்திர ரயில் சேவையையும் இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.
சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976ஆம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இடம்பெறுகிறது.
இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் பயணத்தை மேற்கொண்டது.
அதன்பின்னர், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் குறித்த சேவை லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரிவரை இடம்பெற்றது.
இந்நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து அட்டாரி வரை வாரம் இருமுறை இந்த ரயில் சேவை இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினத்துடன் குறித்த சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்ததைத் தொடர்ந்து மற்றுமொரு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசு இரத்துச் செய்ததன் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)