ஸ்ரீலங்கா கிரிக்கட் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது தமது முதல் இன்னிங்ஸில் தடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதேவேளை, பல வருடங்களாக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பில் இணைவதற்கு இணக்கம் தெரிவிக்காதிருந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தற்போது அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை பொது முகாமையாளரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சட்ட திட்டத்தினை தமது அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல வருட காலங்களாக இதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுவந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை , தற்போது அதனை ஏற்றுள்ளமை குறித்து சம்பந்தப்பட்ட பல அமைப்புக்கள் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, இந்த முறைமை முழுவதுமாக அமுல்படுத்தப்படும் போது, அணி அங்கத்தவர்களினது தனிப்பட்ட தன்மை வெளிப்படலாம் என்ற காரணத்தினாலேயே இதுவரை காலமும் இந்த செயற்பாட்டிற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எதிர்ப்பை தெரிவித்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.(சே)