யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 07 பேர், மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் கைகலப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயிலில் இராணுவத்தினர் கடமையில் இருந்த நிலையில் இந்த மோதல் இடம்பெற்றது.
இந்த மோதல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ள விடுதிவரை நீடித்ததால், சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 07 சிங்கள மாணவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 07 மாணவர்களும், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், கைது செய்யப்பட் 07 மாணவர்களையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.(நி)