அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால்தான், தீவிரவாத தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் இரண்டு பலம் வாய்ந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார சக்திகளே உலகத்தை ஆட்சி செய்கின்றன. டொலர் என்கிற கடதாசிக்கு குண்டுகளைப் பார்க்கவும் பலம் அதிகம்.
இப்படிப்பட்ட நிலையில், நாங்கள் ஒரு தீவாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். எமது அயல் நாடான இந்தியாவிடம் இருந்து, எமக்குத் தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள இருக்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிடக் கூடாது.
கடந்த கால தலைவர்கள் தீர்க்கதரிசனமாக சில முடிவுகளை எடுத்தபடியினால், இந்தியா போன்ற நாடுகள், குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு பயிற்சி முகாம்கூட அமைத்துக் கொடுத்து உதவியதால், எமது நாடு மிகவும் துரதிஷ்டவசமான 30 வருடப் போருக்கு முகங்கொடுத்தது.
இந்த வகையான சந்தர்ப்பத்தற்கு மீண்டும் எமது நாடு செல்லக் கூடாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அரசாங்கம் வழங்கியதால், இந்தியா, அமெரிக்கா, மேற்குலக ஐரோப்பிய நாடுகளின் உறவுகள் சரிந்தன. இதன் பிரதிகூலமாகவே குண்டுத் தாக்குதல்களை நாங்கள் எதிர்கொண்டோம்’ என குறிப்பிட்டுள்ளார். (007)