அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் எமக்கு தேவை : கோட்டாபய

தமிழ் மக்களின் வாக்குகள், தனக்கு அவசியமில்லை என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருப்பவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அண்மையில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

நீண்ட நேரக் கலந்துரையாடலில், தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தனக்கு ஆட்சிக்கு வர முடியும் என்பதை கோட்டாபய ராஜபக்ச கூறியதாக, சித்தார்த்தனை மேற்கோள்காட்டி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விவகாரம் குறித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மக்களின் அனைத்து வாக்குகளும் தனக்குத் தேவைப்படுகிறது என்றும், பொய்யான செய்திகளை பரப்புகின்ற ஊடகங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலுக்கு வந்தால், நல்ல விடயங்களை செய்து விடுவார் என்ற அச்சத்தில், தன்மீது உள்ள தனிப்பட்ட பகையை வைத்துக்கொண்டு, பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் வெளியிட முயற்சி இடம்பெறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தன் மீதும், நாடு மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை, பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் திசைமாற்றி விட முடியாது எனவும், இவ்வாறான பொய்யான செய்திகளுக்கு ஊடகங்கள் துணை போக வேண்டாம் எனவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!