கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும், பாடசாலை மாணவி ஒருவருக்கும் மற்றும் முதியோர்களுக்கும், 3 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவித் திட்டங்களை, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் வழங்கி வைத்துள்ளது.
மாற்றுத்திறனாளியான கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இ.சறோஐpனி, வட்டு. இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இன்று 3 இலட்சம் ரூபா பெறுமதியான மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று, அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி பி.கல்பனாவின், கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, 18 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான புதிய துவிச்சக்கரவண்டி ஒன்றும், அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அன்றாட உணவுத் தேவைக்காக 45 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் 25 முதியவர்களுக்கு தலா ரூபா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகளுக்கான நிதியை, புலம்யெபர் உறவுகளான திருமதி யோகராஜா பத்மாவதி மற்றும் யோகராஜா கணேஸ்; ஆகியோர் வழங்கியுள்ளனர். (சி)