எதிர்வரும் 11ம் திகதி சுகதாச அரங்கில் நடைபெறும் பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது மாநாட்டில், தமது பக்க ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ச….
‘இந்த நாட்டில் இருக்கின்ற பலமான அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. பொதுஜன பெரமுன 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
எமது முதலாவது மாநாடு எதிர்வரும் 11ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இதுவரை காலமும் தலைவர் இல்லாது எமது கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றிருந்தோம். ஆனாலும் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாக தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது கட்டாயமானது.
எனவே சுகததாச அரங்கில் நடைபெறும் எமது கட்சியின் முதலாவது மாநாட்டில் தலைவர் தெரிவு நடைபெறும். கட்சியின் தலைவராக வரப்போகின்றவர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவரை நான் சொல்ல வேண்டிய அவசியம் அல்ல என்று நினைக்கின்றேன்.
அதேபோன்று எதிர்வரும் 100 நாட்களுக்குள் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், எம்மோடு இணைந்து செயற்படும் சகோதர கட்சிகளின் முன்மொழிவுடன், பொது எதிர்க்கட்சியினராகிய எமது பக்க ஜனாதிபதி வேட்பாளரையும் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அன்றைய தினம் நிச்சயமாக அறிவிப்பார். என தெரிவித்துள்ளார். (சி)