தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்துள்ள 36 வயதான ஹஷிம் அம்லா, தனது வயது மற்றும் உடற் தகுதியை கருத்திற் கொண்டும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையிலும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஹஷிம் அம்லாவுக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், ஹஷிம் அம்லா தென்னாபிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியே ஹஷிம் அம்லாவின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது.
1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் பிறந்த ஹஷிம் அம்லா, 1999ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் முதல் தர போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வாழ்க்கையில் தடம் பதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)