நுவரெலியா மாவட்டம் – ஹட்டன் நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் எல்லையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள விடுதி நேற்று மாலை 6.30 மணியளவில் தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் குறித்த விடுதி கிளங்கன் தேயிலை தோட்டத்தின் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லாமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது ஒரு விடுதியாக பயன்படுத்தப்பட்டது.
இலங்கை வங்கியின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விடுதியாக தற்போது பயன்படுத்தப்பட்டு வந்த விடுதி கட்டிடத்தின் தரை மற்றும் கூரைகள் அழகான மரப்பலகைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த கட்டிடத்தின் கூரை பகுதியில் இருந்த குளவி கூட்டை ஊழியர்கள் தீயிட்டு எரிக்க முயற்சித்த வேளையில், குறித்த தீ கட்டிடத்தின் மீது பரவலாக பரவி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
எனினும் குறித்த விடுதியிலிருந்து சில தளபாடங்கள் தீக்கிரையாகாமல் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)