பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும், பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும், கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக, கம்போடிய மன்னர் போரோம்நெத் நோரோடம் ஷிஹானொமி தெரிவித்துள்ளார்.
கம்போடியா அரசின் விசேட அழைப்பின் பேரில், அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், கம்போடிய மன்னருக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் இடம்பெற்றது.
கம்போடிய அரச மாளிக்கைக்குச் சென்ற ஜனாதிபதியை, கம்போடிய மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்காக, மிகவும் கோலாகலமான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பண்டைய காலந்தொட்டு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் உறவுகளை நினைவுகூர்ந்த கம்போடிய மன்னர், தனது அழைப்பின் பேரில் கம்போடியா நாட்டுக்கு வருகை தந்ததையிட்டு, ஜனாதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ், தற்போது இலங்கை பொருளாதார, வர்த்தக, சமூக மற்றும் சமய ரீதியாக அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டிய கம்போடிய மன்னர், குறிப்பாக கம்போடியா பிக்குகளுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட கல்வித்துறையில், இலங்கை அரசாங்கம் கம்போடியாவிற்கு வழங்கும் உதவிகள் குறித்து, தனது நன்றியை தெரிவித்தார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்வி, சுற்றுலா கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து வரும் உறவுகளை, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில், புதிய வழிகளில் முன்கொண்டு செல்வது குறித்து, இதன் போது தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவை குறிக்கும் வகையில், கம்போடியாவிற்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கு, கம்போடிய மன்னருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பௌத்த சமய புத்தெழுச்சிக்காக, இலங்கை தற்போது பல முக்கிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்த பயணத்தில் இணைந்து கொள்ள கிடைத்தமைபற்றி தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கம்போடியாவின் தலைநகரில் அமைந்துள்ள, கம்போடியாவின் சுதந்திர தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியதுடன், கம்போடியாவின் தந்தையாக கருதப்படும் தற்போதைய மன்னரின் தந்தையாரான நோரோடம் ஷிஹானொக் மன்னரை நினைவுகூர்ந்து, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கும் மலர் வளையம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார். (சி)