வவுனியாவில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

வவுனியாவில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.

பாவற்குளம் பகுதியில், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான நூறு வலைகளை மீட்டுள்ளதாகவும், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோ.நிஷாந்தன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில், பாவற்குளம் பகுதியில், உளுக்குளம், சூடுவெந்தபிலவு பகுதிகளைச் சேர்ந்த 10 பேர், தங்கூசி வலை, முக்கூட்டுவலை போன்ற சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்து கைது செய்த போது, அவர்களிடம் இருந்து நூறு வலைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது, கைது செய்யப்பட்ட 10 பேரும், தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கையை, மடுக்கந்தை விஷேட அதிரடிப் படையினருடன், வவுனியா தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிஷாந்தன் தலைமையில் சென்ற அலுவலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!