மக்களை தேடி செல்பவன் நான் : சஜித்

நாட்டு மக்கள் பற்றி சிந்திக்காத தரப்பினர், தற்பொழுது ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் எனவும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில், மக்கள் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு, பலத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும், வீடமைப்பு நிர்;மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, மன்னாரில் ஜோசப்வாஸ் நகர் மற்றும் ஜேசப்புரம் ஆகிய இரு மதிரிக் கிராமங்களை திறந்து வைக்கும்
நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும், துரித கதியில் நிறைவுக்கு கொண்டு வர இருக்கின்றோம்.

நவம்பர் மாதம் உங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான மாதமாக இருக்கின்றது. நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, சரியான தீர்வை நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால், இந்த தீர்மானம் இலங்கை மக்களுக்கும், உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால், நான் மீண்டும் வந்து, மன்னாரில் மாத்திரமல்ல, இலங்கையில் இருக்கக் கூடிய ஒட்டு மொத்த வீட்டுப் பிரச்சினைகளுக்கும், 2025 ஆம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் வீடுகளை நாடளாவிய ரீதியில் கட்டி முடிப்பேன்.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், எந்த ஒரு பாரிய சேதம் ஏற்பட்டவுடன், உடனடியாக சேதம் ஏற்பட்ட இடங்களை மீளக்கட்டி எழுப்ப துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.

சில நாடுகளில் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. யுத்தம் நடக்கும் போது, பிரதேசங்கள், நாடு ரீதியாக சேதம் ஏற்படும்.

யுத்தம் நிறைவடைந்து சமாதான காலம் ஏற்படும் போது, சேதமடைந்த அந்த பகுதிகளை மீண்டும் நிர்மாணிப்பார்கள்.

அவ்வாறு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பை உருவாக்குவார்கள். அந்த அமைப்பிற்கு சர்வதேச நிதி சம்மேளனம் என்று பெயர்.

அப்படியாக ஒரு அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் ஊடாக சர்வதேச நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று, சேதமடைந்த பகுதிகளை முற்று முழுதுமாக நிவர்த்தி செய்து, முழுமையாக கட்டி எழுப்புவார்கள்.

நான் கூறுகின்றேன். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது.
கிட்டத்தட்ட 10 வருடங்களை அண்மித்து விட்டோம்.

இன்று வரை இப்படியான ஒரு சர்வதேச நிதி சம்மேளனத்தை இவர்கள் உருவாக்கினார்களா? என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை.

எமது நாட்டிலும் பெரிய அளவிலே யுத்தம் இடம்பெற்றுள்ளது. யுத்தம் இடம்பெற்ற போது அதிக உயிர்ச் சேதம், அதிக பொருட்சேதம் ஏற்பட்டது.

ஆனால் அவற்றை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா? இல்லை.

யுத்தம் நிறைவடைந்து சில தினங்களில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக பான்கீ மூன் இலங்கைக்கு வந்தார்.

அவர் வந்த போது இப்படியான காலத்தை உருவாக்கினார்களா?
சர்வதேச தொடர்பு தங்களிடம் இருக்கின்றது என பெரிதாக கூறுகின்றார்கள்.
சர்வதேச தொடர்பு இருந்தால் ஏன் உருவாக்கவில்லை.

நீங்கள் உருவாக்கியது என்ன?
யுத்தம் முடிவடைந்த பின்னர் எப்படி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளுவது.
நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாது, நாட்டு மக்களின்பால் அக்கறை கொண்டு அபிவிருத்தியை மேற்கொள்ளாத, யுத்த காலத்தில் சேதமடைந்த பிரதேசங்களை கட்டியெழுப்பாதவர்கள், இப்போது மீண்டும் ஒரு முறை ஆட்சியை தட்டிப்பறிக்க முற்படுகின்றார்கள்.

ஜனாதிபதி வேட்பளராக நான் போட்டியிட போகின்றேன், அவர் போட்டியிடப் போகின்றார் என கூறுகின்றனர்.
அவர்களின் குடும்பத்தில் சகோதரர்களை ராஜாவக்க முற்பட்டார்கள்.

தற்போது மகனை ராஜாவாக்க முற்படுகின்றார்கள். எமது நாட்டிலே காணப்படக்கூடிய விடையங்களை நான் செய்ய வேண்டும்.

சர்வதேச நாடுகளுடன் பெரிய தொடர்பு இருப்பதாக கூறுகின்றார்கள் என்றால், ஏன் உருவாக்கவில்லை.
உங்களை பார்த்து நான் கூறுகின்றேன்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானம் நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால், நவம்பர் மாதத்திலே நாங்கள் ஆட்சிக்கு வந்து, கடந்த 10 வருடங்களாக, இங்கு அமுல்படுத்தப்படாத சர்வதேச நிதி சம்மேளனத்தை, 6 மாத காலப்பகுதிக்குள் உருவாக்கி, வடக்கு கிழக்கில் உங்களை தேடி, உங்கள் காலடிக்கு வந்து, அபிவிருத்திகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வது வேறு யாரும் இல்லை, சஜீத் பிரேமதாஸ என்பதை, இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நிவாரணம் பற்றி பேசுகின்றார்கள்.
நிவாரணம் பற்றி பேசியவர்கள், அன்று நாட்டு மக்கள் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள்.
ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு மாத்திரம் தேவையான அளவு சென்றார்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்று 5 அல்லது 7 என்கின்ற நட்சத்திர விடுதிகளிலே, குடும்பமாக கும்மாளம் அடித்தார்கள்.

குடும்பமாக இவர்கள் கும்மாளம் அடித்தார்களே தவிர, நாட்டு மக்களை பற்றியோ, மக்களின் பிரச்சினை பற்றியே, அவர்கள் அங்கே கருதவில்லை.

அவர்கள் இன்று வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு, மீண்டும் ஒருமுறை ஆட்சியை தட்டிப் பறிக்கக்கூடிய வீணான இந்த உதவாக்கரைகள், அன்று மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை.

குடும்ப ஆட்சியை கொண்டு வந்தார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
ஒரு காலத்திலே ராஜா வாழக்கூடிய அளவுக்கு, சுகபோக வாழக்கையை, நாட்டினுடைய மக்கள் மூலமாக பெற்ற வரிப்பணத்தின் மூலம் வாழ்ந்தார்கள்.

எதிர்வரும் நவம்பர் மாத்ததில், சரியான தீர்மானத்தை எடுத்து, எங்களை ஆட்சிக்கு கொண்டு வரும் பொழுது, நான் அவர்களைப் போல் ராஜாவாக நடந்து கொள்ள மாட்டேன்.

தற்போது உடுத்தியுள்ள இந்த உடையுடன், உங்களை தேடி வருவேன். உங்களின் பிரச்சினைகளை அடையாளம் காணுவேன்.

உங்களுடைய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பெற்று தருவேன். நல்ல ஆட்சியை நாடளாவிய ரீதியில் உங்களுக்கு ஏற்படுத்தி தருவேன்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற எங்களுடைய வேலைத் திட்டங்களையும், எங்களுடன் இணைந்துள்ள மக்களையும் பார்த்து, அவர்களுக்கு பித்துப் பிடித்து விட்டது.

அவர்கள் கூறுகின்றார்கள். சஜீத் பிரேமதாஷவிற்கு வயது கொஞ்சம் காணாது என்று.
நான் கேட்கின்றேன், கடந்த 10 வருடங்களாக சர்வதேச தொடர்புகளுடன் புகுந்து விளையாடிய நீங்கள், இந்த நாட்டிலே சர்வதேச நிதி சம்மேளனத்தை உருவாக்கினீர்களா? இல்லை.

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி சிந்தித்தீர்களா? இல்லை.

இன்றைய நிலை பற்றியும் சிந்திக்காது நாங்கள் வந்தால், ஆட்டை மாடாக்குவோம். அதை இதாக்குவோம் என கூறுகின்றார்கள். இல்லாதவற்றை எல்லாம் கூறுகின்றார்கள். எனவே நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானத்தை எடுங்கள்.

நாங்கள் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்காக, 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கின்றோம்.
என குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட, 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் மற்றும் 230 ஆவது மாதிரிக்கிராமமான ஜேசப்புரம் ஆகிய இரண்டு மதிரிக் கிராமங்கள், இன்று திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் றிஷாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை தலைவர் எம்.முஜாகிர், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோர் இணைந்து, மாதிரிக் கிராமங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

ஜேசப்வாஸ் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் 67 வீடுகளும், 230 ஆவது மாதிரிக் கிராமமான ஜேசப்புரம் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட 28 வீடுகள் உள்ளடங்களாக 95 வீடுகள், வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள், சுயதொழில் உபகரணங்கள், கடன் திட்டத்திற்கான காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!