முல்லைத்தீவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக முல்லைத்தீவு – குமரி குளத்தில் மீன் பிடிக்கச் செல்லும் நபர், நேற்றைய தினமும் வழமைபோல மீன்பிடிக்கச் சென்று, வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடி, இன்றைய தினம் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்பவர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து குறித்த குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றவர், வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் அனைவரும் இணைந்து இரவு 8 மணி முதல் அக்குளத்தில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது இன்று அதிகாலை 4.30 மணியளவில் காணாமல் போயிருந்த நபர், குளத்தினுள் சடலமாக காணப்படுவதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மல்லாவி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் செல்வபுரம் வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!