காஸ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் நெருக்குதல்!

ஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவைக் கண்டித்து, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில், நேற்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தின் போதே இந்தியாவுடனான உறவினை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாகிஸ்தான் தூதரை இந்தியாவில் இருந்து திரும்பப்பெறுவதுடன், பாகிஸ்தானில் தங்கியுள்ள இந்திய தூதுவரையும் உடனடியாக இந்தியா திரும்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஸ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு இரத்துச் செய்ததோடு, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஸ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

அத்தோடு, காஸ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என்ற பகிரங்க எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.

இந்நிலையிலேயே தற்போது இந்தியாவுடனான வர்த்தக,தூதர உறவை முறித்துக்கொள்ளும் முடிவை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்குமிடையில் போர்ப்பதற்றம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!