வெகுவிரைவில் வெளியில் வந்து, தமது குடும்பங்களுடன் சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிடம் வெளிப்படுத்தியுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர், நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, இன்று மன்னார் பிரஜைகள் குழுவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் போது, மன்னார் ஜம்மியத்துல் உலாமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவியும் இணைந்து கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழு நேரடியாக சென்று சந்திப்பது வழமை.
நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடிய போது ஐனாதிபதிக்கு ஓர் மகஜர் அனுப்பி, எங்களை விடுதலை செய்வதற்கான ஒரு கோரிக்கையை எங்களிடம் முன்வைத்தார்கள்.
எங்களை ஏன் விடுதலை செய்ய முடியாது? என்கின்ற கேள்வியையும் அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.
எமது தமிழ் அரசியல்வாதிகள், அரசு ஏன் எங்களை இவ்வாறு புறம்தள்ளி இருக்கின்றது? தொடர்ந்தும்
தங்களுக்காக குரல் கொடுங்கள் என்று எங்களிடம் தொடர்ச்சியாக கோட்டார்கள்.
தாங்கள் வெகுவிரைவில் வெளியில் வந்து தமது குடும்பங்களோடு சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை எங்களிடத்தில் தெரிவித்தார்கள்.
பல ஆண்டுகளாக அதாவது 11 வருடங்களுக்கு மேலாக அர்த்தமற்ற முறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தேடல் ஒரு புறம் தேடலாகவே இருக்கின்றது.
அரசும், அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட
வேண்டும். சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற இவர்கள் பல வழிகளிலே நிரபராதிகளாக இருக்கின்றார்கள்.
இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றவர்களுக்கு நாம் ஒத்துழைத்து, இன்னும் இவர்களின் விடுதலைக்கு அதிகமாக குரல் கொடுக்க வேண்டும்.
நேரடி குற்றங்கள், கொலைகள் பல செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டு பல பதவிகளை வகிக்கின்றனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் 105 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 12 அரசியல் கைதிகள் மோசமான நிரிலையில் சிறையில் இருக்கின்றனர்.
இவர்களின் விடுதலையை துரிதப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி…
அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள்
பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார பாதிப்பு காரணமாக, அவர்களின் குழந்தைகளின் கல்வி நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மனிதாபிமாக செயற்பட்டு அவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அரசியல் கைதிகளை பார்க்கச் செல்ல வேண்டும் என்றால் அவர்களின் குடும்ப உறவினர்களுக்கு பாரிய செலவீனங்கள் ஏற்படுகிறது.
இவை மட்டுமல்லாது ஏப்ரல் குண்டு வெடிப்பு காரணமாக, பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். என குறிப்பிட்டார். (சி)