வவுனியாவில் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், வவுனியாவில் 2 ஆயிரத்து 649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக, கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், வவுனியாவில் 2 ஆயிரத்து 649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய, நாடாளாவிய ரீதியில் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் போக்குவரத்து பொலிஸாரால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய வவுனியாவில், பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோனின் வழிகாட்டலில், மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 2ஆயிரத்து 649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின்போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 சாரதிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், அவர்களது சாரதி அனுமதி பத்திரங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினை, வாகன ஆவணங்கள் இல்லாமை, வாகன இருக்கை பட்டி அணியாமை, தலைக்கவசம் அணியாமை, வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை, விபத்துக்களை ஏற்படுத்தியமை என்பன தொடர்பில் 2 ஆயிரத்து 584 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து நீதிமன்றம் மற்றும் தபால் நிலையம் ஊடாக குற்றப் பணங்கள் அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!