புல்வாமா தாக்குதல் போன்று இன்னும் ஒரு தாக்குதல் இடம்பெறும்-இம்ரான்கான்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து இரத்துசெய்யப்பட்டதால் புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும் என்று இம்ரான்கான் மிரட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் சூழ்நிலை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றி இருந்தார்

இந்த நடவடிக்கையின் மூலம் புல்வாமா தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறும். நான் இதுபோல தாக்குதல் நிகழப்போகிறது என்று முன்கூட்டியே தெரிவிக்கிறேன். ஆனால் அவர்கள் (இந்தியா) நம் மீது மீண்டும் பழியை சுமத்த முயற்சிப்பார்கள். அவர்கள் நம் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவார்கள், நாமும் திருப்பி தாக்குவோம்.

அதன்பின்னர் என்ன நடக்கும்? யார் இந்த போரில் வெற்றிபெறுவார்கள்? யாரும் வெற்றி பெறப்போவதில்லை. இது ஒட்டுமொத்த உலகத்துக்கே மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது அணுகுண்டு மிரட்டல் அல்ல.

அவர்கள் காஷ்மீரில் என்ன செய்தார்களோ அது அவர்கள் சம்பந்தப்பட்ட கொள்கை. அவர்கள் இனவெறி கொள்கை உடையவர்கள். அவர்களது கொள்கை தான் மகாத்மா காந்தியை கொன்றது. இந்த பிரச்சினை தொடர்பாக உலகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த சட்டங்களையே கடைப்பிடிக்கமாட்டார்கள். பின்னர் நாங்கள் அதற்கு பொறுப்பாக மாட்டோம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட உலகின் ஒவ்வொரு அமைப்பிலும் நாம் இதுபற்றி வலியுறுத்துவோம். சர்வதேச கோர்ட்டுக்கு இந்த பிரச்சினையை கொண்டுசெல்லும் திட்டமும் உள்ளது.

நான் முதலில் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயன்றபோது, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இயங்குவதாக தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். கடுமையான மற்றும் வலியை ஏற்படுத்தும் இராணுவ பயிற்சி பள்ளி படுகொலைக்கு பின்னர், எங்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக மோடியிடம் நான் கூறினேன்.

ஆனால் இந்திய தரப்புக்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் அக்கறை இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நாம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டு முடிவுப்படி சென்றபோது, பேச்சுவார்த்தை மூலம் வலுப்படுத்துவதில் அவர்களுக்கு விருப்பமில்லாதது குறித்து எனக்கு சந்தேகம் எழுந்தது.

நாம் பேச்சுவார்த்தைக்கு அணுகுவதை நமது பலவீனமாக இந்தியா கருதியதால், நாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை நிறுத்திக்கொண்டோம்.

என்றும் இம்ரான்கான் கூறினார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!