இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவிலிருந்து பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அசந்த டி மெல் தலைமையிலான புதிய தெரிவுக்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அசந்த டி மெல் மற்றும் சமிந்து மெண்டிஸ் ஆகியோரின் ஒப்பந்தக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அசந்த டி மெல் தெரிவுக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயற்படுவார் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கிரேம் லெப்ரோய் தலைமையிலான இலங்கை அணியின் தெரிவுக்குழு நீக்கப்பட்டு அசந்த டி மெல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த தெரிவுக்குழுவில் அசந்த டி மெல், சமிந்து மெண்டிஸ், பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.
இந் நிலையிலேயே பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் நீக்கப்பட்டு முன்னாள் இலங்கை வீரர் வினோதன் ஜோன் புதிய உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.(சே)