மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரையில், புற்தரைகளை வெட்டியேற்றிக்கொண்டிருந்த ட்ரக்டரை மக்கள் மறித்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
இன்று காலை பெரியகல்லாறு பொது மயானத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் உள்ள புற்தரைகளை சிலர் இயந்திரங்களின் உதவியுடன் ட்ரக்டர்களில் வெட்டியேற்றியுள்ளனர்.
சாய்ந்தமருதுவில் உள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு ஏற்றுவதாக கூறியே குறித்த புற்தரைகளை வெட்டி ஏற்றியுள்ளனர்.
இதன் போது அங்கு சென்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் சண்.கணேஸநாதன் குறித்த நடவடிக்கையினை தடுத்ததுடன் அப்பகுதியில் ஒன்றுகூடிய மக்களும் அதற்கு எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மண்பிட்டி ஏற்றுவது தடுக்கப்பட்டதுடன் ட்ரக்டரும் பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குள் புற்தரைகள் கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களினால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகரசபை முதல்வரும் உறுதுணையாக செயற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இதேநேரம் குறித்த சம்பவத்தின்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் கிராம சேவகர்களினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிக்கு வந்த மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அதிர்ப்தி தெரிவித்துடன் இது குறித்து அரசாங்க அதிபருக்கும் அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
எந்தவித அனுமதியும் இல்லாமல் புற்தரைகள் அகற்றப்படும்போது அது தொடர்பில் நடவடிக்கையெடுக்காமல் களுவாஞ்சிகுடி பொலிஸார் சம்பவத்தினை திசைதிருப்ப முயன்றதாகவும் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். (சி)