காட்டு யானைகள் அட்டகாசம் : வவுனியா விவசாயிகள் பாதிப்பு

வவுனியாவில், காட்டு யானைகளின் அட்டகாசத்தினால், விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக, வவுனியாவில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால், காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் நுழைந்து, விவசாய நிலங்களையும் பயன் தரும் மரங்களையும் பாரியளவில் சேதப்படுத்துகின்றது.

இதனால் விவசாயத்தை முற்றுமுழுதாக நம்பி வாழும் விவசாயிகள், விசம் அருந்தி தற்கொலை செய்யுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட, பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் பிரதான வாழ்வாதாரமாக, தெங்குப் பயிர்ச் செய்கை காணப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், சுமார் 75 முதல் 80 வரையான, நிறை காயுடன் காணப்பட்ட தென்னை மரங்களையும், 15 ற்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், நூறு அடிக்கு மேற்பட்ட மரவள்ளி மரங்களையும் பிடுங்கி சேதப்படுத்தியுள்ளது.

சுமார் 7 வருடங்கள், கிணற்றில் இருந்து நீர் இறைத்து பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும், தென்னம் பிள்ளைகள் பயன் தரும் காலம் வரும் சந்தர்ப்பத்தில், யானைகளால் அழிக்கப்படுவதாகவும், இதனால் மன ரீதியில் பாதிக்கப்பட் விவசாயிகள், விசமருந்தி உயிரை மாய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் குறிப்பிட்டனர்.

பெரியகுளம் கிராமத்தில், தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகவும், விவசாயிகளுக்கு விவசாய அழிவு நிவாரணம் மற்றும் யானைக்கான மின்சார வேலி அமைத்து வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!