திருகோணமலையில் கொலையுண்டவரின் எலும்க் கூடு மகனிடம் ஒப்படைப்பு

திருகோணமலை-கோணேஸ்வர ஆலயத்தில் கடமையாற்றி வந்த விஸ்வகேஸ்வர பூசகரால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகள் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றையதினம், குறித்த எலும்புக்கூடுகள் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், திருகோணமலை கோணேஸ்வர கோயிலில் பூசகராகக் கடமையாற்றி வந்த விஸ்வகேஸ்வர ஐயருக்கு, 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பூசகரால் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையிலும், திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் வழங்கிய தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜீன் மாதம் 19ஆம் திகதி குறித்த பூசகரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரது மனைவியின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், அதனை எடுத்துச் செல்கிறீர்களா எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, அவரது மகனாகிய விஸ்வகேஸர் வெங்கடேஸ்வரர் சர்மாவிடம் அதனை ஒப்படைக்குமாறு பூசகர் கூறியதையடுத்து, நேற்று அவரது மகனிடம், அவரது மனைவியின் எலும்புக்கூடு மற்றும் சில சான்றுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அதில் அல்பங்கள், டயரி மற்றும் பிராமணர் தாலிக்கொடி, நூல் மற்றும் பழைய புடவை கொண்ட பெட்டி என்பவற்றை, நீதிபதி அவரது மகனிடம் ஒப்படைத்தார்.

குறித்து எலும்புக்கூட்டை திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலுள்ள தாவடி என்ற பகுதிக்கு எடுத்துச்சென்று தாவடி தெற்கு இந்து மயானத்தில் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!