இளைஞர், யுவதிகளுக்கு இடையிலான உறவுப்பயணம் நிகழ்ச்சி திட்டம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமும் இணைந்து இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகளுக்கு இடையிலான உறவுப்பயணம் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான அங்குராப்பண நிகழ்வு நேற்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவின் இளைஞர் சேவைகள் அதிகாரி பிரபாகரன் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.

உறவுப்பயணம் திட்டத்தின் கீழ் கேகாலையிலிருந்து கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் சேவைகள் கழகத்தின் 30 பேர் கொண்ட சிங்கள இளைஞர், யுவதிகள் தமிழர் கலாசார பாரம்பரியத்துடன் வரவேற்கப்பட்டனர்.

குறித்த குழுவினரை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் கழக உறுப்பினர்கள் வெற்றிலை கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார்.

அத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப்பணிப்பாளர் ஏரந்திக ஹெத்த,  அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.வி.சுசந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஐந்து நாள் வதிவிடப் பயிற்சியாக நடைபெறவுள்ள இளைஞர் பரிமாற்று உறவுப்பயணம் நிகழ்வில் மூவினங்களுக்கும் இடையிலான கலாசார பாரம்பரியங்கள் மற்றும் இன நல்லுறவு பற்றியும் முரண்பாடுகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது பற்றியும் தமிழ் சிங்கள், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் களப்பயணங்கள் செய்தும் அறிந்து கொள்ளவுள்ளனர்.

இவ் அங்குராப்பண நிகழ்வினை சர்வமத தலைவர்களான சங்கைக்குரிய சங்கரட்ண தேரர், சிவஸ்ரீ கு.சச்சிதானந்தசிவம் குருக்கள், அருட்தந்தை கிருபைராஜா, மௌலவி இம்ரான் ஆகியோர் ஆசீ வழங்கி ஆரம்பித்து வைத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!