டயகமவில் தீ விபத்து:தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து நாசம்!

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், குறித்த வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஓடிச் சென்று தீயை பாரிய சிரமத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் விபத்திற்குள்ளான வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன், வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் தற்காலிகமாக சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.(மா)

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!