முதல் போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன.

90 ஓட்டம் என்ற பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய 7 விக்கெட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதன் பின்னர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 398 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய முன்தினம் நான்காம் நாள் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்ற இங்கிலாந்து அணியின் போட்டியின் இறுதி நாளான நேற்று அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 146 ஓட்டத்துக்குள் சுருண்டது.

இதனால் அவுஸ்திரேலிய  அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 11 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 28 ஓட்டங்களுடனும், ஜோய் டென்லி 11 ஓட்டத்துடனும், பட்லர் ஒரு ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ், ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் தலா 6 ஓட்டங்களுடனும், மொயின் அலி 4 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டத்துடனும், ஸ்டீவர்ட் பிரோட் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், ஜேம்ஸ் அண்டர்சன் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நெதன் லியோன் 6 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

1. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி பேர்மிங்கம், எம்பஸ்டன் மைதானத்தில் கூடுதல் ஓட்டங்களினால் வெற்றிபெற்ற இரண்டாவது அணியாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.

2. உள்ளூர் மைதானமொன்றில் முதல் இன்னிங்ஸில் 90 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களினால் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

3 இங்கிலாந்து அணியுடன் முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

4. முதல் இன்னிங்ஸில் 90 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களினால் பின்னிலையடைந்து மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!