தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானது இல்லை : ஜனாதிபதி

மரண தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானது இல்லை என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என, எனக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

எனக்கு கிடைத்த இந்த அறிவித்தலால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இது போதைப்பொருட்களுக்கு எதிரான பிரசாரத்தை வலுப்படுத்தும். என குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை இல்லாதொழிக்கவும், அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான சட்டமூலம், பாராளுமன்றில் கடந்த ஜுலை மாதம் 12 ஆம் திகதி முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்று திவுலபிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

கடந்த 29 ஆம் திகதி, கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் 6 ஆவது நிகழ்ச்சித்திட்டம், 6 நாட்களாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்களை வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்காக 123 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இன்றையதினமும், கம்பஹா மாவட்ட மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன், ‘கமரெக்கும’ அமைப்பு பதிவு உறுதிப்பத்திரம் வழங்குதல், சமூர்த்தி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலா 2 இலட்சம் ரூபா காசோலை வழங்குதல், என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கடனுதவி, விவசாய, கமநல சபையின் விவசாய ஓய்வூதிய புத்தகங்கள் வழங்குதல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கடன் உதவிகள், சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், கலை நிறுவனங்களுக்கான உபகரணங்கள், சுயதொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல், ரணவிரு சேவா அதிகார சபையினூடாக வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

‘புனரோதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, காணி பயன்பாட்டு திணைக்களத்தின் வழிகாட்டலில் நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாக்கும் 6 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதி அலுவலகத்தினால் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, ஹர்ஷன ராஜகருணா, சந்தன ஜயக்கொடி, அஜித் பஸ்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!