மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள, மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமமான கணேசபுரம் கிராமத்தின் சக்தி வித்தியாலய மாணவன் பாஸ்கரன் சுலக்ஷன் என்பவரே, 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இம் மாணவன், இம்முறை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற, கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியிலே, இச் சாதனையைப் படைத்து பாடசாலைக்கும் தனது கிராமத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற, 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம், எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
மாணவன் பாஸ்கரனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, மண்டூர் 14 சக்தி வித்தியால பதில் அதிபர் வ.சௌஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வெல்லாவெளி உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் எம்.ஆர்.ரபிஅசாம், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இவர் கடந்த காலங்களில் மாகாண மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி, நீளம் பாய்தல் போட்டியில் மூன்றாம் இடம், 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் இரண்டாம் இடம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை மாணவன் சுலக்சன் நிரூபித்துள்ளான்.
இவ்வாறான எல்லைப்புறக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் ஆற்றலை ஊக்குவிப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (சி)