அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் இன்று(06) இரவு நடைபெற்றது.

ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவு கூரல் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி றெமன்ஸ் உள்ளிட்ட சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கத்தின் தலையுரையோடு ஆரம்பமான நினைவு கூரல் நிகழ்வில் இரு நிமிட இறைவணக்கம் அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

முதல் சுடரினை சிகான் கே.கேந்திரமூர்த்தி ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய கராத்தே வீரர்களும் சுடரினை ஏற்றி வைத்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.

தொடர்ந்து அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் கராத்தே துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பில் நினைவு கூர்ந்து பலர் உரையாற்றினர்.

நிறைவாக ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி றெமன்ஸ் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவி புரியும் உடற்பயிற்சி தொடர்பிலும் அப்பயிற்சி கராத்தோ கலையுடன் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அத்தோடு உலகில் இன்று குருதி அழுத்தத்தால் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பாகவும் அதிலிருந்து நாம் மீண்டு சுகதேகிகளாக வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்க வழக்கம் தொடர்பிலும் தெளிவு படுத்தினார்.(ம)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!