குளங்கள் கிராமங்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளில், காலநிலை மாற்றத்தை தாக்குபிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ், அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் குளங்களை, வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன், வவுனியாவில் இன்று குளங்களைப் பார்வையிட்டார்.
கடந்த வருடம், குறித்த திட்டத்தின் கீழ், 14 குளங்கள் வவுனியாவில் புனரமைப்பு செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ஆளுனர், மதவு வைத்த குளத்திற்கு சென்று, புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அத்துடன், ஏனைய சில குளங்களையும் சென்று பார்வையிட்டார்.
காலநிலை வேறுபாடுகள் மற்றும் தீவிர மாற்றங்களுக்கு தாக்குப்பிடித்தலை நோக்காக்கொண்டு, உலர் வலயங்களில் வாழும் சிறு விவசாயிகளை பலப்படுத்தும் நோக்குடன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நிதி உதவியுடன், அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, கமநல உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். (சி)