கொழும்பில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தேச தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரச பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள, கொழும்பு – லோட்டஸ் வீதி பெரும் போர்க்களமாக மாறியதுடன், புகை மண்டலமாகவும் தோற்றமளித்ததாக, எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சுயநிர்ணயம் மற்றும் புனர்நிர்மாணம் என்ற போர்வையில், தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள், இன்று கொழும்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கொழும்பு புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், பின்னர் எதிர்ப்புப் பேரணியாக மாறியது.

புகையிரத நிலையத்தில் இருந்து, ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி மாணவர்களின் பேரணி செல்ல ஆரம்பமானது.

இருப்பினும் பாதுகாப்பு கருதி, பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார், ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள லோட்டஸ் வீதியை, இரும்பிலான வேலிகளை இட்டு இடைமறைத்தனர்.

இதன் காரணமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன் போது, கலகத்தடுப்பு பொலிஸார் அமைத்த இரும்பு வேலிகளை அகற்றி, உள்ளே நுழைய முயற்சித்த மாணவர்களைக் கலைப்பதற்காக, பொலிஸார் நீர்பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் அதனையும் சமாளித்த படியினால், கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் பொலிஸார் மேற்கொண்டு, போராட்டத்தைக் கலைத்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!