சுனில் குணவர்தன தலைமை பயிற்றுநராக நியமிக்க தீர்மானம்

தேசிய மெய்வல்லுநர் அணியின் தலைமை பயிற்றுநராக சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இவரை தலைமை நியமிப்பது தொடர்பான எழுத்து மூல பரிந்துரை கடிதத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அனுப்பியுள்ளது.

தேசிய மெய்வல்லுநர் அணியின் தலைமை பயிற்றுநர் பதவி அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து வந்தது. இந்நிலையில், மெய்வல்லுநர் பயிற்றுநர்களில் ஒருவரான சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய மெய்வல்லுநர் குழுவை சுனில் குணவர்தனவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதியன்று சிலாபத்தில் பிறந்த சுனில் குணவர்தன, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியை 11 செக்கன்கள் என்ற நேரப்பெறுதியில் ஓடிமுடித்த முதலாவது பாடசாலை மாணவன் என்ற சிறப்பை பெற்றவராவார்.

இவர் தேசிய, சர்வதேச மட்டங்களில் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தவராவார். அக்காலத்தில் ஆண்களுக்கான 100, 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இவரின் சாதனையை தேசிய சாதனைகளாக 20 ஆண்டுகளாக நிலைத்திருந்திருந்தமை விசேட அம்சமாகும்.

தமயந்தி தர்ஷா, ரொஹான் பிரதீப் குமார், பிரசன்ன அமரசேகர, நயன்த்தி குமாரி, மஹேஷ் பெரேரா உள்ளிட்ட பல முன்னணி வீர, வீராங்கனைகளை உருவாக்கியவரர் இவரே.

1994 ஆம் ஆண்டு முதல் 200 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசிய மெய்வல்லுநர் அணியின் தலைமை பயிற்றுநராக சுனில் குணவர்தன கடமையாற்றினார். இவரின் காலப்பகுதி இலங்கை மெய்வல்லுநர் துறைக்கு பொற்காலமாக விளங்கியது. இக்காலத்திலேயே இலங்கை சர்வதேச மட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றது. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுசந்திக்கா ஜயசிங்க பதக்கம் வென்றிருந்ததும் இவரின் காலப்பகுதில் என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!