ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலை காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை சில தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அத்துடன் அம்மாநிலத்திற்கு கூடுதலாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது இந்த மாலிநத்தில் 90,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் மற்றும் றோ அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இன்று காலையில் மாநிலங்களவை கூடியதும் காஷ்மீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில்,“ காஷ்மீரில் போர் வரக்கூடிய சூழல் நிலவுவதால் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும். காஷ்மீரின் அரசியல் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது ஏன்? இதற்கு முன்னுரிமை அளித்து விவாதிக்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான இட ஒதுக்கீடு திருத்த மசோதாவுவை தாக்கல் செய்து உள்துறை அமித்ஷா பேசுகையில்,“ எதிர்க்கட்சித் தலைவரின் அனைத்து கேள்விக்கும் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஆவது சட்டப்பிரிவு மற்றும் காஷ்மீருக்கான 35 ஏ என்ற சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதனிடையே ஐம்மு காஷ்மீரில்  மாநிலம் முழுவதிற்கும் 144 தடையுத்தரவு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.(சே)