கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
நாடு முழுவதும் 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்திட்யசகருமான ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் பரீட்சை தொடர்பில் மாணவர்கள் கொண்டிருந்த அழுத்தத்தை குறைப்பதற்கு, 3 மணித்தியாலங்களை கொண்ட வினாப்பத்திரங்களுக்கு விடையளிப்பதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் குறித்த நேர நீடிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து, பாதுகாப்பு அமைச்சின் துணையுடன், பொலிஸ் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில், பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு பரீட்சார்த்திகள் 30 நிமிடத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிப்பது பொருத்தமானதாகும் என்றும் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் மத்தியில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்பிப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளரினால் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படத்துடன் பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பரீட்சைக்கான குறிப்பிட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள், கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிசெய்யப்பட்ட 2 புகைப்படங்களுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும், சிறந்த சித்திகளைப்பெற்று நாட்டின் நற்பிரஜைகளாக உருவாகுவதற்கு டான் குழுமம் சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். (மு)