திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெளிவாரிப் பட்டதாரிகள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘வேலைவாய்ப்பை வெல்லும் தொடர் போராட்டத்தில் அணிவகுப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில், வெளிவாரிப் பட்டதாரிகளால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாறை, யாழ்ப்பாணம், மொனராகலை, குருணாகல், கண்டி உட்பட 14 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் வெளிவாரிப் பட்டதாரிகளின் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருகோணமலை வெளிவாரிப் பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
‘அரசை மாற்றியமைக்கும் சக்தி வெளிவாரி மாணவர்களின் கையில்’
‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டதே’
‘பட்டம் பெற்றது பாதையில் நிற்பதற்கா?’
‘பட்டதாரிகள் நாட்டின் சொத்து’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசமிட்டனர்.
அத்துடன், அரசை மற்றி அமைக்கும் சக்தி பட்டதாரிகளிடத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்குவதில் இந்த அரசு பாகுபாடு காட்டுவதாகவும் தெரிவித்தனர்.
சுமார் 250இற்கு மேற்பட்ட பட்டதாரிகள் இக்; கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)