கடந்தகாலங்களில் தாம் விட்ட தவறினை புரிந்து கொண்டு புதிய சிந்தனை புதிய கொள்கையில் பயணிக்கக் கூடிய புதியதொருவரை வேட்பாளராக நிறுத்துவதன் ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் வெல்ல முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, கபீர்கசீம், அகிலவிராஜ் காரியவசம் லக்ஸ்மன் கிரியல்ல போன்றவர்களை பரிந்துரை செய்கின்றார்கள். அது தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததன் பின்னர் எமக்கு அதனைத் தெரிவித்தால் நாம் அது தொடர்பில் பேச்சுகளை மேற்கொண்டு கட்சி என்ற ரீதியில் தீர்மானங்களை எடுப்போம். ஐக்கிய தேசிய கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக வந்தால் மட்டுமே மக்களுக்கு நன்மையாக அமையும். அதேபோன்று தாம் விட்ட தவறினை உணர்ந்து புதிய கொள்கை, புதிய சிந்தனை புதிய ஒருவரை தெரிவு செய்தால் மட்டுமே முன்னோக்கி செல்ல முடியும். ஒற்றுமை என்பது முக்கியமானது அதனை ஐக்கிய தேசிய கட்சி புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாக ஒரு குழுவாக இணைந்து செயற்படுவதும் அவசியமானது. பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய புதிய திட்டங்கள் வகுத்து அதனை முன்னெடுத்துச் செல்வதும் கட்டாயமானது. 2015ம் ஆண்டு இருந்த நிலைமை தற்போது இல்லை. தற்போது நாட்டில் எந்த கட்சிக்கும் சார்பில்லாத 40 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாக்குகள்தான் யார் ஜனாதிபதி ஆவது என்பதை தீர்மானிக்கும். அவர்களின் விரும்பம் இல்லாது எந்த கட்சியினாலும் வெற்றிபெற முடியாது. அவர்களின் விருப்பங்களை தெரிந்த புரிந்த வேலைத்திட்டம் ஒன்று தேவை. அவர்களின் அபிலாசைகளை அறிந்து கொண்ட கூட்டணி தேவை, வேலைத்திட்டம் தேவை தலைமைத்துவம் கொண்ட கூட்டமும் தேவை என்று தெரிவித்தார். (மு)