இன முறுகலை தடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றிய கல்முனை மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு கல்முனை தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்
கொள்வதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய வீதி, கடற்கரை பள்ளி வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு (03)கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்….
அரசியல் இலாபத்தை மையமாக கொண்டு தனிநபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டினால் கல்முனை தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறுகல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது, அதனை தடுக்கும் முகமாகவே கல்முனை பொலிஸ் நிலையத்தில் நாங்கள் முறைப்பாடு செய்தோம்
அரச வர்த்தமானியிலும், மாநகர சபையிலும் தரவைப்பிள்ளையார் என அவ்வீதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் யாருடைய அனுமதியுமின்றி அன்மையில் ஜக்கியதேசிய கட்சி அமைப்பாளர் ரசாக்கினால் ரன்மாவத்த வீதி அமைப்பு திட்டத்தின் கீழ் கடற்கரை பள்ளி வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர் பலகை நாட்டப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர மேயர் மற்றும் ஆணையாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தேன். அத்தோடு சக உறுப்பினரின் உதவியுடன் பொலிசாரிடமும் முறைப்பாடு செய்ததோடு வழக்குத்தாக்கல் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டோம்.
ஆனாலும் வழக்குத்தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருடன் குறித்த விடயம் தொடர்பில் பேசினோம். இதன் பிரகாரம் மாநகர சபை குறித்த பெயர்ப்பலகையை நேற்றிரவு அகற்றியதாக அறிந்தோம்.
ஆகவே எங்களது கோரிக்கையினை ஏற்று இனமுறுகலை தடுக்கும் வண்ணம் பெயர்ப்பலகையினை அகற்றிய மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருக்கும் இவ்வேளை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.(சி)