நுவரெலியா மாவட்டம் நாவலபிட்டி ஜயசுந்தர ஓ விட்டப்பகுதியில், மக்களால் சிறுத்தை புலி குட்டி ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஜயசுந்தர ஓ விட்டப் பகுதியில் உள்ள மக்களின் முயற்சியால், சிறுத்தைப் புலி குட்டி ஒன்று இன்று காலை பிடிக்கபட்டுள்ள தாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் தப்பி ஓடிய சிறுத்தை புலியின் குட்டியே இவ்வாறு பொதுமக்களால் பிடிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரதேச மக்களால் கூடு ஒன்று தயாரிக்கப்பட்டு, சிறுத்தை புலி குட்டி நடமாடிய பகுதியில் வைக்கபட்ட வேளை, குறித்த கூட்டினுள் சிறுத்தை புலிக் குட்டி சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் பிடிக்கப்பட்ட சிறுத்தை புலி குட்டி தொடர்பில் பொதுமக்களால் நாவலபிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சிறுத்தை புலியின் குட்டியினை கூண்டோடு மீட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட சிறுத்தை புலி குட்டியினை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.(மு)