கடந்த மாதம் 19ஆம் திகதி மலையகத்தில் பெய்த கடும் மழை காரணமாக, நுவரெலியா கினிகத்தேன பகுதி மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடு கோரி நுவரெலியா கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியினை மறித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்சரிவினால் வர்த்தக நிலையங்களையும், குடியிருப்புகளையும் பறிகொடுத்த மக்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்சரிவு இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையிலும் தமக்கான நஷ்ட்ட ஈட்டினையோ, அல்லது தங்களுக்கான எவ்வித மாற்று நடவடிக்கையினையும் எவரும் பெற்று கொடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற இரண்டு நாள் கழித்து நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் கபிர் ஹாசிம் மற்றும் அமைச்சர் பழனிதிகாம்பரம் ஆகியோர் வந்து பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அப்பகுதி மக்கள், இதுவரையிலும் பாதிக்கப்பட்ட தமக்கு உதவி கரம் நீட்ட எவரும் முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
எனவே மண்சரிவு அபாயத்தில் பாதிக்கப்பட்ட தமக்கு உரிய அதிகாரிகள் நஸ்டஈடு வழங்கவும், மற்றும் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(மு)