இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு எனவும், இந்நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் சிங்கள பௌத்த கலாசாரத்தை அனுசரித்தே வாழ வேண்டும் எனவும், சர்வதேச முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி செய்க் மொஹம்மட் பின் அப்துல் கரீம் அல் இஸா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற சமாதானம் மற்றும் சகவாழ்வு என்பவற்றுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கலாநிதி கரீம் அல் இஸா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமயத்தை முதன்மைப்படுத்திய பாடசாலை எந்தவொரு நாட்டுக்கும் அவசியமற்றது. பாடசாலையின் ஊடாக 90 வீதம் செயன்முறைக் கல்வியும், 10 வீதம் பாட போதனையும் வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால இளம் சந்ததியினருக்கு பொறுமை மற்றும் மாற்று மதத்தவர்களை மதித்தல் என்பன பாடசாலையினூடாக போதிக்கப்பட வேண்டும். எந்தவொரு மதமும் இன்னுமொரு மதத்தை அடக்கி எழுச்சி பெற சிந்திக்காமல், சகல மதத்துக்கும் மதிப்பளித்து, சகவாழ்வைப் பேணி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.