முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும், புதுக்குடியிருப்பு பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019 நேற்று நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புதுக்குடியிருப்பு-முல்லைத்தீவு வீதியில், குழந்தையேசு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய கலாசார அம்சங்களை தாங்கிய ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டது.
ஊர்தி பவனி சென்ற அதேவேளையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு அண்மையில் இருந்து தமிழர்களின் கலை அம்சங்கள் தாங்கிய கலை வடிவங்களும், ஊர்தியுடன் இணைந்து கொண்டது. இதற்கமைய, தவில், நாதஸ்வரம் முழங்க காவடி, குடமூதல், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், இன்னியம், சிலம்படி மற்றும் பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சித்தரிக்கின்ற அம்சங்களும் ஊர்திப் பவனியுடன் இணைந்து இருந்தது.
இந்த பேரணி மற்றும் ஊர்தி பவனி, புதுக்குடியிருப்பு நகர் பகுதியை அண்மித்த நிலையில், நகர் பகுதியில் வைத்து விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அங்கிருந்து விருந்தினர்களும், கலை அம்சங்களை தாங்கிய கலை படைப்புக்களும், ஊர்திகளும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தைச் சென்றடைந்தன.
பொன்விழா மண்டபத்தை அடைந்ததும், அங்கு பல்வேறு கலை நிகழ்வுகளும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கலை படைப்பாளர்களின் கலை அம்சங்கள் மேடையேற்றப்பட்டதோடு, தமிழர்களின் பாரம்பரிய பண்டைய கலை கலாசார அம்சங்களை கட்டிக் காக்கின்ற கலைஞர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு புதுக்குடியிருப்பு பண்பாட்டு பேரவையினால் புதியவள் என்கின்ற மலரின் நாலாவது மலர் நேற்றைய நாளில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும், புதுக்குடியிருப்பு பண்பாட்டு பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்கள செயலாளர் லக்ஷ்மன் இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், அரச திணைக்களங்களின் தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.(மு)