ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர், பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும், 3 மாதங்கள் கடந்த பின்னரும், அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர், மரண தண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை, விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு, இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும். இதனை அறிந்துதான் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன். எந்த தடைகள் வந்தாலும் எனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை.
போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன், எனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம் பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே.
எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு, எனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.
‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற, வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில், இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவிற்கேற்ப, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி, போதைப்பொருளுக்கு எதிரான எதிர்கால தலைமுறை ஒன்றை உருவாக்கும் நோக்குடன், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனுடன் இணைந்ததாக, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்னவின் வழிகாட்டலில், போதையில் இருந்து விடுபடுவோம் என்ற கருப்பொருளின் கீழ், இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பாடசாலை, வட்டார மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள், கவிதை, சிறுகதை, சித்திரம், உரையாடல், குறு நாடகம், குறுந் திரைப்படம் ஆகிய 9 துறைகளில் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 1036 மாணவர்களுக்கு, பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.நாவின்ன, சாந்த பண்டார, முன்னாள் மாகாண அமைச்சர்களான அத்துல விஜேசிங்க, தர்மசிறி தசநாயக்க, சம்பிக்க ராமநாயக்க ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (சி)